வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ரணில், நிஷா பேச்சு
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா பிஷ்வால் மற்றும் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிங்கபூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் அங்கு நிஷா பிஸ்வாலை சந்தித்துள்ளதாக பிரதமர் அலுலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, அபிவிருத்தி நடவடிக்கைகள் பொருளாதார விடயங்கள் மற்றும் சமூக பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இருவரும் விரிவாக கலந்துரையாடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டியை இணைத்து உருவாக்கப்படவுள்ள பொருளாதார வலையம், கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை நகரங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு, தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை வரவேற்றுள்ள நிஷா பிஸ்வால் அமெரிக்காவின் ஒத்துழைப்புகள் தொடருமெனவும் உறுதியளித்துள்ளார்.