கூட்டமைப்பின் தீர்மானங்களை சவாலுக்கு உட்படுத்துகிறாராம் விக்கி;மைத்திரி சாடல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது தீர்மானங்களை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலேயே வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தீர்மானங்க ளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அரசாங்கம் என்ற வகையில் அனைவரது கருத்துக்களையும் பெற்று, ஒன்றிணைத்து செயற்படுவது கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வெளிவிவகார அமைச்சின் கொன்சூலர் அலுவலகமொன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையில் ஊடகவியலாளர்களையும், ஊடகங்களின் பிரதானிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்தார்.
இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் அரச அலுவலகங்களை புறம்பாக யாழ்ப்பாணத்தில் அமைக்கும்படி கோருவது, பிரிவினை வாதத்திற்கு அடித்தளம் இடுவதைப் போன்று உணர்த்தப்படுவதாகவும், இதுதொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் என்ன என்றும் ஊடகவியலாளர்களால் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு அப்பாற் சென்றே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானங்களையும், அறிவிப்புகளையும் மேற்கொள்கின்றார். அரசாங்கம் என்ற வகையில் எமது நோக்கங்களையும், முயற்சிகளையும் முன்னெடுப்பதற்கு அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டும்” – என்றார்