Breaking News

 '410 ஏக்கர் விவசாய காணி வேண்டும்'

கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள மாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமான சுமார் 410 ஏக்கர் விவசாய பண்ணைக்குரிய காணியை, மீளப் பெற்றுக்கொடுக்குமாறு, மாகாண விவசாய அமைச்சினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

வட்டக்கச்சி பகுதியில், மாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமான சுமார் 441 ஏக்கர் காணியில், 31 ஏக்கர் காணி மாத்திரமே, விவசாய அமைச்சின் கீழ் உள்ளது. ஏனைய, 410 ஏக்கர் காணியும், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 15ஆம் திகதியன்று, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர், மேற்படி விவசாய பண்ணைக்கான காணியை, படையினரிடமிருந்து மீளப் பெற்றுக்கொடுக்குமாறு, கோரிக்கை விடுத்திருந்தனர். 

இவ்விடயம் தொடர்பில், கடிதமொன்றைச் சமர்ப்பிக்குமாறு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவித்திருந்தார். இதற்கிணங்க, வடமாகாண விவசாய அமைச்சினால், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.