சொந்த மண்ணில் வீழ்ந்த இலங்கை ; தொடரை வசப்படுத்தியது ஆஸி
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலியா இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்திருந்த நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இலங்கைக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியை வெற்றிக்கொண்டதன் மூலம் இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற பகலிரவு ஆட்டத்தின்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்களை எதிர்கொண்ட இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தனஞ்சய டி சில்வா சிறப்பாக துடுப்பெடுத்தாடி 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் இலங்கை அணியின் விக்கட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன.
எனினும் உபாதையின் மத்தியிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் 71 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஆஸி அணி சார்பில் ஹேஸ்டிங்ஸ் 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
213 என்ற இலகுவான இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸி. அணி 31 ஓவர்களை மாத்திரமே எதிர்கொண்டு 4 விக்கட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்று இலகுவாக வெற்றிபெற்றது.
ஆஸி அணி சார்பில் ஜோர்ஜ் பெய்லி ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, ஆரோன் பின்ச் 19 பந்துகளில் அரைச்சதம் கடந்து 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஸி அணியின் ஹேஸ்டிங்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 3-1 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரை கைப்பற்றியுள்ளது.