விஷ ஊசி விவகாரம்! முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பம்!
விஷ ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்ப டவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல் நலம் தொடர்பில் நிலவுகின்ற கவலைகளைக் கருத்திற்கொண்டு, வட மாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அவர்களது நலன்கள் தொடர்பாக எமது அமைச்சு கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் மேற்படி புனர்வாழ்வு பெற்றவர்கள் தமது உடல்நிலை குறித்து மேற்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளையும், மருத்துவக் கவனிப்பையும் வழங்க வடமாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே, இத்தகைய மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்கள் பின்வரும் வைத்தியசாலைகளில் உரிய வைத்திய அதிகாரிகளைச் சந்தித்து தமக்கான ஆலோசனைகளையும், சேவைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
மருத்துவ ஆலோசனைகளை பெறவிரும்புவோர் மாவட்ட வைத்தியசாலைகளிலுள்ள வரவேற்பாளரை அணுகி மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முதற்கட்டமாக எதிர்வரும் 2ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் பின்வரும் வைத்தியசாலைகளில் இம் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குச் சமுகமளிக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பொது வைத்தியசாலை, கிளிநொச்சி – பி.ப. 4 மணி
மாவட்ட பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு – மு.ப 8 மணி
மாவட்ட பொது வைத்தியசாலை, வவுனியா – பி.ப. 1 மணி
மாவட்ட பொது வைத்தியசாலை, மன்னார் – மு.ப 8 மணி
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் – பி.ப. 1 மணி