Breaking News

உதய கம்மன்பிலவை போன்று நாம் இனவாதம் பேசவில்லை: சுரேஸ்



எழுக தமிழ்’ பேரணிக்கு அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கைதுசெய்யப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்திற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

உதய கம்மன்பிலவின் கருத்துக்கள் யாவும் அர்த்தமற்ற வகையில் காணப்படுவதாக தெரிவித்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன், எழுக தமிழ் பேரணிக்கும் வட மாகாண சபைக்கும் எவ்வித தொடர்பும் காணப்படவில்லையென்றும், அவ்வாறு எந்த வாகனமும் பயன்படுத்தப்படவில்லையென்றும் கூறியுள்ளார்.

மேலும் உதய கம்மன்பில போன்றோர் கண்டியிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டு தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசியதைப் போன்று தாம் சிங்களவர்களுக்கு எதிராக இனவாதம் பேசவில்லையென்றும், தமிழர்களது ஜனநாயக ரீதியான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவே குறித்த பேரணி நடத்தப்பட்டதெனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.