இரு தசாப்தங்களின் பின்னர் இடம்பெற்ற கொம்படி அம்மன் ஆலய பாற்குட பவனி
கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு, 26 வருடங்களின் பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கடற்கரையோரத்தில் அமைந்திருக்கின்ற குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் முக்கிய அம்சமாக இன்றைய பாற்குட பவனி இடம்பெற்றது.
இன்று காலை 7 மணிக்கு கண்டாவளை ஆவரஞ்சாட்டி குஞ்சுப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து 108 பெண்கள் மஞ்சள் ஆடையணிந்து பாற்செம்புகளை பவனியாக எடுத்து வந்து, கொம்படி அம்பாளுக்கு அபிசேகம் செய்தனர்.
வடக்கின் பூர்வீக ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயம், யுத்தம் காரணமாக பலத்த சேதமடைந்து கடந்த 1990ஆம் ஆண்டிற்குப் பின்னர் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
யுத்தம் நிறைவடைந்து தற்போது குறித்த பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆலயம் புனரமைக்கப்பட்டு தற்போது திருவிழா நடைபெறுகின்றமையானது மக்கள் மனதில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.