Breaking News

கல்லடி ஆலயத்தின் மடப்பள்ளிக்கு தீவைக்கப்பட்டுள்ளதால் பதற்றம்



திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கல்லடி கிராமத்திலுள்ள மலைநீலியம்மன் கோயிலின் மடப்பள்ளி அங்குள்ள பௌத்த துறவியொருவரினால் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது..

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேலதிக பொலிசாரும், அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக சேருநுவர ரஜமஹா விகாரையில் பணியாற்றும் ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கல்லடி கிராமத்திலுள்ள மலைநீலியம்மன் கோயிலின் மடப்பள்ளி நேற்று திங்கட்கிழமை காலை 10.30 அளவில் ஆள் நடமாட்டம் இல்லாத போது கோயிலின் பின்னால் மறைந்திருந்த காவியுடை தரித்த ஒருவர் ஆலயத்தின் மடப்பள்ளிக்குத் தீவைத்து விட்டு அருகிலுள்ள ரஜமகா விகாரைக்குள் புகுந்து கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக கிராம உத்தியோகத்தர் கனகசுந்தரம் ஜெயரூபன் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து சேருநுவர பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் ஸ்தலத்திற்கு விரைந்து அங்கு ஏற்பட்டிருந்த பதற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

தீயினால் மடப்பள்ளி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கோயில் பொருட்கள் அனைத்தும்; தீயினால் முற்றாக எரிந்துள்ளதாகவும் கிராம உத்தியோகத்தர் ஜெயரூபன் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து கல்லடி உட்பட அயல் கிராமங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் அதிரடிப் படையினரும் ரோந்துப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்தக் கோயில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து பௌத்த பிக்கு ஒருவரால் சேதப்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.