Breaking News

வடக்கு, தெற்கு இனவாத சக்திகளின் செயற்பாடுகள் எமக்கு பாரிய சவால்: ஹக்கீம்



இனப்பிரச்சனைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால், வடக்கிலும் தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே எமக்கு சவாலாக உள்ளன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், பின்னர் ஊடகவியலாளர்களுடன் அளவளாவிய போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், கடந்த கால அனுபவங்களுடன் பார்க்கையில் தற்போது உருவெடுத்துள்ள இனவாதம் எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளும் ‘பொங்கு தமிழ்’ நடத்தியே, அவர்களுக்கிருந்த நல்ல வாய்ப்பைத் தவற விட்டனர். சில விடயங்களில் அவ்வப்போது விட்ட தவறுகள் எங்களுக்கு படிப்பினையாக உள்ளன.

இனப்பிரச்சனைக்கான தீர்வு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கும் வகையில் சில விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் ‘எழுக தமிழ்’, கிழக்கில் ‘கிழக்கின் எழுச்சி’, தெற்கில் ‘சிங்-ஹலே’ என்றும் விதவிதமான இனவாத தீவர சக்திகள் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன.

இவர்கள் வெவ்வேறு துருவங்களாக செயற்படுவதாக தென்பட்டாலும் ஒருவருக்கொருவர் உதவுகின்ற பாணியிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இறுதியில் இவர்கள் எல்லோரும் எதிரியின் நண்பர்கள் என்ற அடிப்படையில் செயற்படுவதை நாங்கள் காண்கின்றோம்.

குறிப்பாக பக்குவமாகவும், சாணக்கியமாகவும் கையாளப்பட வேண்டிய விடயங்களைப் பகிரங்கமாக போட்டுடைத்துக் குழப்பிவிடுகின்ற நிலவரங்களை ஏற்படுத்தக்கூடாது. மிகவும் கவனமாக இந்த விடயங்களைக் கையாள வேண்டியுள்ளது. பக்குவமாகவும், சாணக்கியமாகவும், சமயோசிதமாகவும், செயற்பட்டால் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை காணமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

ஆனால் வடக்கிலும், தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே எமக்கு சவாலாக உள்ளன. அவர்கள் சித்துவிளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர். இதிலே நாங்கள் சிக்கிவிடாமல் நடுநிலைப் பேணி செயற்படவேண்டும்- என்றார்.