Breaking News

இந்தியா-பாகிஸ்தான் பேச்சு நடத்த வேண்டும்: அமெரிக்கா யோசனை



இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா யோசனை தெரிவித்து உள்ளது.

காஷ்மீர் ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. இந்த தாக்குதலை கண்டிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஆனால் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் சாதித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா யோசனை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அதிக ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் வளமான பிராந்தியத்தை உருவாக்க, இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு குறிப்பாக இரு நாட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தை உள்ளிட்ட அனைத்து செயல்களுக்கும் அமெரிக்கா தீவிர ஆதரவை அளித்து வருகிறது.

இந்தியாவும், பாகிஸ்தானும் உறவுகளை சீர்படுத்துதல் மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு போன்றவற்றால் பலன் பெற வேண்டும் என்பதே எங்களின் நீண்டகால நிலைப்பாடு ஆகும். இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தை தணிக்க நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.