மிதக்கும் ஆயுத களஞ்சியம் குறித்து கோட்டாபய விளக்கம்
கடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட அவசியத் தேவையை நிறைவு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானமே மிதக்கும் ஆயுத களஞ்சியமாகும். இந்த தீர்மானத்துக்கு எதிராக தற்பொழுது வழக்குத் தொடர்வது என்பது அநீதியான ஒன்றாகும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை உருவாக்கப்பட்டது இலங்கையைப் பொருத்தவரையில் புதியதாக இருப்பினும், ஏனைய நாடுகளில் சாதாரண விடமாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடல் கொள்ளைக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு நடவடிக்கையையாவது மேற்கொள்ளுமாறு ஐ.நா. சபையினால் சகல நாடுகளும் கேட்கப்பட்டிருந்தன. இந்தவகையில், கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு உலகில் பலமுள்ள நாடுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் அவை தோல்வியடைந்தன.
இந்த கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு எமது நாட்டிலும் ரக்னா லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனம் உட்பட 22 தனியார் கம்பனிகளுடன் இணைந்து இவ்வாறான ஓர் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், பலருக்கு தொழில்வாய்ப்புக்களும் கிடைக்கப் பெற்றன. வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரும் ஆயுதங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை வழங்கவும் முடியுமாக இருந்தது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.