Breaking News

புதிய கட்சியைப் பதிவு செய்ய மகிந்த அணியினர் எடுத்த முயற்சி தோல்வி

மகிந்த ராஜபக்ச தலைமையில் செயற்படும் கூட்டு எதிரணியினர் புதிய அரசியல் கட்சி ஒன்றைப் பதிவு செய்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. புதிய அரசியல் கட்சியை இப்போது பதிவு செய்ய முடியாது என்று, கூட்டு எதிரணியினருக்கு சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


புதிய அரசியல் கட்சியைப் பதிவு செய்வது தொடர்பாக, பசில் ராஜபக்ச தலைமையில், கூட்டு எதிரணியின் தலைவர்கள் சிலர் நேற்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இதன்போது கருத்து வெளியிட்ட மகிந்த தேசப்பிரிய, புதுக்குடியிருப்பு- கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட சூழலில், இப்போது புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய முடியாது.

இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு பிரதான தடையாக இருந்து வருகிறது.

தேர்தல்கள் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரிய பின்னரே, புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்ய முடியும்.

எனினும், புதுக்குடியிருப்பு – கரைத்துறைப்பற்று தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இவ்வாறு விண்ணப்பங்களைக் கோர முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.