Breaking News

போராளிகளின் சமாதிகளுக்கு மேல் இராணுவ முகாம்கள்! எங்கே சமாதானம் வரும்!!

போராளிகளைப் புதைத்த நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது. போராளிகளின் சமாதிகளைத் தரைமட்டமாக்கி அதன் மேல் இராணுவ முகாம்களை அமைத்திருக்கிறார்கள்.


இந்த நிலையில் சமாதானம் எங்கே வரும்? எங்களுடைய சமாதிகளை எங்களிடம் விட்டு விடுங்கள் எனத் தெரிவித்தார் வடக்குக் கல்வியமைச்சர் த.குருகுலராஜா.

யாழ். மாவட்ட சமாதானத்திற்கு, நீதிக்குமான பணியகம் மற்றும் வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் கலாசார விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில்,”சமாதானத்திற்காய் ஒன்றிணைவோம்” எனும் தொனிப்பொருளிலான சர்வதேச சமாதான தினம் நேற்று பிற்பகல்-02.30 மணியளவில் யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரியில் யாழ். மாவட்டச் சமாதானத்திற்கும்,நீதிக்குமான பணியகத்தின் தலைவர் சோ.சிவரூபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகத்திலே நடைபெறுகின்ற பல போர்களை ஐக்கிய நாடுகள் சபையினராலும் தடுத்து நிறுத்த முடியாமலிருக்கிறது. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாகவுள்ள பான் கீமூனும் எங்களுடைய நாட்டிற்கு வருகை தந்து சென்றிருக்கிறார்.

சமாதானம் தொடர்பில் எங்களுடன் பேசினார். சமாதானம் குறித்தான உறுதிமொழியை எங்களிடம் தந்து சென்றிருக்கிறார். முள்ளிவாய்க்காலில் போர் நடைபெற்று முடிவடைந்ததன் பின்னர் முதன் முதலாக அங்கு சென்று பார்வையிட்டார். ஆனால். இந்த வருடம் அவர் இங்கு வருகை தந்த போது முள்ளிவாய்க்கால் சென்று அவர் பார்வையிடவில்லை.

பாடசாலையில் கல்வி பயிலும் எங்களுடைய பிள்ளைகளுக்குச் சமாதானக் கல்வியை நாங்கள் வழங்க முன்வர வேண்டும். பல்வேறு வகையான ஊடகங்களை நாங்கள் சமாதானத்திற்காகப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

அனைவரிடத்திலும் இது தொடர்பான பரப்புரைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டிலே சமாதானத்திற்கான ஆரம்பத்தை நாங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் சமாதானத்தைப் பற்றிப் பேசுகிறோமோ? சமாதானத்தின் அறிகுறிகளை எங்களுடைய செயல்கள் மூலம் நாங்கள் காண்பிக்கிறோமா?

தற்போது நாட்டிலுள்ள மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்களில் வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்கும் சேவை நிலையங்கள் தொடர்பில் கண்டறிந்து பட்டியல்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான இடங்களில் மக்களுக்குத் திறமையான சேவைகள் காத்திருக்கிறது. அங்குள்ள உத்தியோகத்தர்கள் பொதுமக்களுடன் பேசும் போது கோபப்படாமல் சாந்தியும், சமாதானத்துடனும் பேசி, பழகி மக்களுக்குத் திறமையான சேவைகளை வழங்குபவர்கள் தெரிவு செய்யப்பட்டே சிறந்த இடம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.