Breaking News

போர்க்குற்ற ரகசியத்தை போட்டுடைத்த வீரவன்ச



கிளிநொச்சியில் மாபெரும் கூட்டுப் புதைகுழி யொன்றின் அமைவிடம் குறித்த தகவல்களை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மல்வத்து மகாநாயக்க தேரருக்கு விளக்கமளிப்பதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அண்மையில் தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது புதிய அரசியலமைப்பின் ஊடாக போர்க்குற்றங்கள் தொடர்பில் தண்டனை வழங்கும் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இராணுவத்தினர் தண்டிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்ட இராணுவ முகாம் ஒன்று அமைந்திருந்த இடத்தில் பாரிய கூட்டுப் புதைகுழியொன்று இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அடையாளம் காணமுடியாத பொதுமக்கள் ஆகியோரின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளதாக விமல் வீரவங்ச மகாநாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விடுதலைப் புலிகளின் மாவீரர் கிராமம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த குறித்த இராணுவ முகாமை அகற்றிக் கொண்டுள்ள நிலையில், அங்குள்ள நிலம் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமிடத்து கூட்டுப் புதைகுழியில் காணப்படும் எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டு இராணுவத்தினர் போர்க்குற்றம் புரிந்ததாக நிரூபிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலை தோன்றுமிடத்து கொசோவோ போன்று இலங்கையிலும் தனி நாடொன்றை உருவாக்கிக் கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையீடு ஒன்றை மேற்கொள்ளும் அபாயம் ஏற்படும் என்றும் விமல் வீரவன்ச அச்சம் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவாளர்களில் ஒருவரான விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள கூட்டுப் புதைகுழி தொடர்பான இந்தத் தகவல் தற்போது பெரும் பரபரப்பான விடயமாக மாறிப் போயுள்ளது.