நல்லாட்சி உண்மையான மக்களாட்சியாக மாற வேண்டும்!
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் சிறுபான்மையினரின் பங்களிப்பு மிக முக்கியமானதெனவும், அவசியமானதெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு விரைவாக தீர்வு கிட்ட வேண்டுமானால் ஆரோக்கியமானதொரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வெளிப்படையாகவே அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே இக்கருத்தை சம்பந்தன் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.
புதிய அரசியல் சாசன உருவாக்கத்தில் இரு பெரும் கட்சிகளுடன் சிறுபான்மைக் கட்சிகளும் இணைந்து செயற்படும் பட்சத்திலேயே நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய, பலம் கொண்டதான அரசியல் சாசனத்தை உருவாக்க முடியும் என்பதை அவர் அங்கு மனம் திறந்து தெரிவித்திருக்கின்றார்.
நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைபெறச் செய்ய வேண்டுமானால் சகல மக்களும் சுதந்திரமாக வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
அதனூடாக மட்டுமே மக்கள் மத்தியில் ஒற்றுமையையும். நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியும். இவ்வாறான சாதகமான சூழ்நிலை ஏற்பட வேண்டுமானால் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதான அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கருத்துக்கள் இன்றைய நிலையில் மிகவும் வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்.
கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு அல்லது அரசியல் சாசனம் தென்னிலங்கையின் பெரும்பான்மைக் கட்சிகளால் மட்டுமே உருவாக்கப்பட்டன.
முதலில் 1972ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கிய அரசியல் சாசனத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரோ, தமிழ் மக்களதோ ஆதரவு கிடைக்கவில்லை.
அதேபோன்று 1978ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிப் பீடமேறிய போது உருவாக்கிய அரசியலமைப்புக்கு சுதந்திரக் கட்சியோ, தமிழ் தரப்புகளோ சம்மதத்தை வழங்கவில்லை.
அவை பாராளுமன்றப் பெரும்பான்மை வாக்குகளால் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. முழு நாட்டினதும் சம்மதம் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
பாராளுமன்ற வாக்குப் பலம் மட்டுமே அவற்றை ஏற்படுத்த உதவின.இத்தகையதொரு கள நிலைமையில் தான் நாட்டுக்கு புதியதொரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமென்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வருகின்றது.
நாட்டின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக இரண்டு பிரதான கட்சிகளும் சில சிறிய கட்சிகளும், சிறுபான்மைக் கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து நல்லாட்சி அரசொன்றை ஏற்படுத்தி இருக்கும் சூழ்நிலையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் முனைப்புக் காட்டி வருகின்றன.
அதன் பொருட்டு தற்போது பாராளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கென அரசியல் நடவடிக்கைக் குழுவும் பல உப குழுக்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டு பிரதான பெரும்பான்மைக் கட்சிகளும், நாட்டிலுள்ள ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும் இந்த புதிய அரசியல் சாசன உருவாக்கத்துக்கு பங்களிப்புச் செய்து கொண்டிருப்பதால் அது குறித்து திருப்திகொள்ள முடிகிறது.
எல்லாத் தரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் சாசனமொன்றை முதற் தடவையாக இந்த நாட்டில் விரைவில் காண முடியும் என்ற பூரண நம்பிக்கை இன்று உருவாகி வருகிறது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் தமிழ் மக்களும் இது விடயத்தில் பங்களிப்புச் செய்ய வேண்டியதன் அவசியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஐயா வலியுறுத்தி இருக்கின்றார்.
புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரமானதொரு தீர்வு எட்டப்பட வேண்டியதன் தேவையை அரசாங்கமும், சர்வதேசமும் உணர்ந்துள்ள நிலையில் அரசு இவ்விடயத்தை விரைவுபடுத்த முனைப்புக் காட்டி வருகின்றது.
ஆரோக்கியமான அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு காத்திரமானதும், வலுவானதுமான அரசியல் சாசனமொன்றே முதலில் தேவைப்படுகின்றது.
முழு நாடும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பூரணத்துவம் கொண்ட அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமானால் சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளதும், அரசியலமைப்புகளதும், சிவில் சமூகத்தினதும் பங்களிப்பு மிக மிக அவசியமானதாகும்.
வெளியே இருந்து விமர்சிப்பதைவிட உள் நுழைந்து ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கி ஒத்துழைப்பதன் மூலம் முரண்பாடுகளைத் தவிர்த்து உடன்பாடுகளை எட்ட முடியும் என நம்பலாம்.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்த அழைப்பு தமிழ் தரப்புகளுக்கு மட்டுமல்ல ஏனைய சகல தரப்புகளுக்கும் பொருத்தமுடையதாகவே கொள்ள முடியும்.
நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியல் சாசனத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய பல அம்சங்கள் உள்வாங்கப்படக்கூடிய சாதகமான சமிக்ஞைகள் காணப்படுவதாக தமிழ் மக்கள் உணர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டு வருவதில் தாமதம் காட்டப்படக் கூடாது. நல்லாட்சி அரசு மீதான நம்பிக்கை வீண் போய்விடக் கூடாது.
சிறிய அளவிலேனும் மக்கள் அரசு மீது நம்பிக்கை இழப்பார்களானால் அதுதான் எதிரணியினருக்கு சாதகமானதாகி விடும். அதனையே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
முழு நாடும் ஏகமனதாக அங்கீகரிக்கக் கூடிய புதிய அரசியல் சாசனத்தை மிக விரைவில் எதிர்பார்ப்போமாக.
பெரும்பான்மைச் சமூகங்களைப் போன்றே அனைத்து சிறுபான்மைச் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் சாசனமொன்றை உருவாக்கிய வரலாற்றுப் பதிவை விரைவில் காண்போம்.