Breaking News

சிரியாவில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சிரியா அரசு கையொப்பம்

சிரியாவில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சிரியா அரசு கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, அங்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.


 சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டில் உள்ள பல்வேறு போராளி குழுக்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் உட்பட சுமார் 3 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில் ஒப்பந்தம் குறித்து இன்று ஜான் கெர்ரி செய்தியாளர்களிடம் விளக்கினார். ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக அவர் கூறியவை பின்வருமாறு;

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுப் படை மற்றும் அரசு எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் படைக்கும் இடையேயான சண்டையை நிறுத்தி வைக்கிறது. ஆனால் இந்த சண்டை நிறுத்தம் தீவிரவாதிகளுக்கு பொருந்தாது.

இந்த ஒப்பந்தத்தில் அதிபர் ஆசாத் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட வில்லை.

உள்ளூர் நேரப்படி இன்று மாலை (திங்கட்கிழமை) 7 மணிக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக இந்த போர்நிறுத்தம் 48 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும். அது வெற்றிகரமாக முடிந்தால், அடுத்த 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்படும்.

இந்த நேரத்தில் சிரிய அரசு படைகள் கிளர்ச்சியாளரின் இடங்கள் மீது தாக்குதலில் ஈடுபடக் கூடாது.

ஒரு வாரத்திற்கு ஒப்பந்தம் கடைபிடிக்கப்பட்டால் அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து படெக் அல்-ஷாம் தீவிரவாத அமைப்புக்கு எதிராக ராணுவ தாக்குதல்களை அதிகரிக்கும்.

இந்த கூட்டு நடவடிக்கை காலத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா கூட்டு அமலாக்கம் மையத்தை அமைத்து, அதில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்வார்கள்.