திலகரத்ன டில்ஷானின் இறுதி வேண்டுகோள் இதுதான்
தனது 17 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு இரசிகர்களை வழங்கிய ஆதரவை தற்போதைய இளம் வீரர்களை உள்ளடக்கிய அணிக்கும் வழங்க வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து நேற்றுடன் ஓய்வுபெற்ற ஸ்ரீலங்கா அணியின் சகலதுறை வீரர் திலகரத்ன டில்ஷான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி இருபதுக்கு-20 போட்டியின் நிறைவில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற திலகரத்ன டில்ஷானை கௌரவப்படுத்தும் விசேட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் தனது கிரிக்கெட் வாழ்விற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் நினைவுகூர்ந்தார்.
குறிப்பாக 17 வருட கிரிக்கெட் வாழ்வில் பயிற்சியளித்தவர்கள், வாய்ப்பு வழங்கியவர்கள் ஆதரவுவழங்கிய அனைவரையும் பெயர்குறிப்பிட்டு டில்ஷான் நன்றி தெரிவித்தார்.
1976ஆம் ஆண்டு பிறந்த திலகரத்ன முதியன்சலாகே டில்ஷான் கடந்த 1999ஆம் ஆண்டு சிம்பாவ்பே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தைப் பெற்றார்.
அதே வருடம் சிம்பாவ்பே அணிக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியில் அறிமுகத்தைப்பெற்ற டில்ஷான், 17 வருடங்களாக ஸ்ரீலங்கா அணி சார்பில் விளையாடி பல வெற்றிகளுக்கு காரணமாக அமைந்ததோடு, அணியின் தலைவராகவும் பல போட்டிகளில் கடமையாற்றியுள்ளார்.
87 டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்கள், 23 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 40.54 சராசரியுடன் 5,492 ஓட்டங்களைப் பெற்றுள்ள டில்ஷான், 330 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 22 சதங்கள், 47 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 39.27 என்ற சராசரியுடன் 10,290 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
பந்துவீச்சில் டெஸ்ட்போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும், ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 106 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
80 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடியுள்ள டில்ஷான், 28.19 என்ற சராசரியுடன் 1,889 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு, 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஆசிய 11 பேர் அணி, டெல்லி டெயார்டெவில்ஸ், புளும்பீல்ட் கழகம், கயானா அமேசன் வொரியர்ஸ், தமிழ் யூனியன் உள்ளிட்ட மேலும் பல உள்ளூர் மற்றும் சர்வதேச கழகங்கள் சார்பாகவும் பல போட்டிளில் டில்ஷான் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.