இறுதி போரின் போது அமெரிக்கா இலங்கை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதா?
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப்போரின் போது அமெரிக்கப்படையினர் இலங்கை மீது தாக்குதல் நடத்தலாம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அஞ்சியதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளோடு ஏற்பட்ட யுத்தமும் அதன் அனுபவமும் உள்ளடக்கிய “நந்திக்கடலுக்கான பாதை” என்னும் நூலினை எழுதி வெளியிட்டுள்ள கமால் குணரத்ன அந்த நூலினூடாக பல்வேறு இராணுவத் தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அமெரிக்கா இலங்கை மீது தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியம் இருந்ததாக அப்போது கருதப்பட்டது.
காரணம் போரின் இறுதிக் காலத்தில், அமெரிக்கா உள்ளிட்ட பலம்வாய்ந்த பல நாடுகள், இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்தன. இதனால் இலங்கை மீது அமெரிக்கா வான் மூலமாக தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் அப்போது இருந்தது.
இதேவேளை மூன்றாம் தரப்பினரிடம், புலிகள் சரணடைய இடமளிக்க வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கோரியிருந்தன. ஆனால் இலங்கை இராணுவத்தினரிடத்தில் மட்டுமே விடுதலைப் புலிகள் சரணடைவதாக இருந்தால் சரணடைய வேண்டும். வேறு நாட்டு அனுசரனையுடன் சரணடைய முடியாது என்பதில் கோத்தபாய உறுதியாக இருந்தார்.
ஆனால் அவரின் இந்த முடிவினால் அமெரிக்கா இலங்கை மீது கோபம் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடும். எனவே அவதானமாக இருக்குமாறு கோத்தபாய உத்தரவிட்டதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதனால், இலங்கை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அவர் எமக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதேவேளை சீனா இராணுவத் தளபதியும் என்னோடு தொடர்பு கொண்டு அமெரிக்காவின் தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கையை கடைப்பிடிக்குமாறு கேட்டிருந்த்தார்.
எனினும் இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கவில்லை. ஆனால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால் அதனை எதிர் கொள்வது தொடர்பில் நாம் ஆராய்ந்திருந்தோம்.
இந்த தகவல் சாதாரண படையினருக்கு அறிவிக்கப்படாமல் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுக்கு மட்டும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்றும் அவர் தனது நூலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.