வடக்கு - கிழக்கை இணைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது - மகிந்த காட்டம்
அரசமைப்பு மறுசீரமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
அம்பாறையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில், எழுக தமிழ் பேரணிக்கு எதிரான தமிழர்களும் இருக்கின்றனர். இது பற்றி முஸ்லிம் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
வடக்கில் விக்னேஸ்வரன் செயற்பட்டது போல், தெற்கிலுள்ள முதலமைச்சர் ஒருவர் செயற்பட்டிருந்தால், இனவாதத்தை தூண்டுகிறார் எனக்கூறி இந்நேரம் அவரை கைது செய்திருப்பார்கள். ஆனால், விக்னேஸ்வரன் விடயத்தில் சட்டம் இன்னும் செயற்படவில்லை.
விக்னேஸ்வரன் என்பவர் நீதியரசராக செயற்பட்ட நபர். எனவே, அவரின் அறிவிப்புகள் வியப்பாக இருக்கின்றது. அவர் கூறுவது போல் நடவடிக்கை எடுத்தால், அவரின் பிள்ளைகளுக்கும் சிக்கல் ஏற்படும். அவரின் பிள்ளைகள், சிங்களவர்களேயே திருமணம் முடித்துள்ளனர். எனவே, அவர்களையும் வெளியேறவா சொல்கின்றார்? எனவே, குறுகிய அரசியலை நடத்தாது, அறிவிப்பை மீளப்பெறுமாறு வலியுறுத்து கின்றோம்.
நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காகவே நாம் யுத்தம் செய்தோம். அந்த ஐக்கியம் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை ஒரு சிறிய நாடு. அது இந்தியாவோ, அமெரிக்காவோ அல்ல. சிலமணிநேரங்களில் அனைத்து இடங்களுக்கும் சென்று வரலாம். எனவே, எதற்காக இந்தப் பிரிவினை?
அரசியலமைப்பு திருத்தம் என்ற போர்வை யில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்குரிய முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகக் கூறி, வேறொரு திட்டம் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. மாகாண சபைகள் இணைக்கப்பட்டால் பாரிய சிக்கல்கள் உருவாகும் நிலை இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.