Breaking News

தமிழரசுக் கட்சியை தாக்கிப் பேசுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல!



அவுஸ்திரேலிய உயர்தானிகராலய உயர் அதிகாரி நிக்கலஸ் பேனாட்டுக்கும், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள வட மாகாண பேரவைச் செயலகத்தில் இன்று காலை 10.30 அளவில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், 'இந்தச் சந்திப்பில், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும், ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரப்பகிர்வை கோருகின்றோம் என்பதையும், வடக்கு கிழக்கு இணைந்த மாநிலமாக அது அமையவேண்டும் என்பதையும், 2016 ஆம் ஆண்டு முடிவதற்குள் அதற்கான அடிப்படைத் தீர்வு வெளிவரும் என எதிர்பார்க்கின்றோம் என்றும், அதற்கு சர்வதேச சமூகம் போன்று அவுஸ்திரேலிய அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, 'நேற்றைய தினம் இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், 'நாங்கள் சொன்னதைத்தான் அவர்கள் சொல்லுகிறார்கள். இது கூட்டமைப்பைப் பாதிக்காது. ஆனால், தமிழரசுக்கட்சியை தாக்கிப் பேசுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல' எனவும் குறிப்பிட்டார்.