ஆசிரியர்களுக்கு கட்டாயப் பயிற்சி, நாடளாவிய ரீதியில் 5 மத்திய நிலையங்கள்
பாடசாலைக் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பயிற்சி பெறுவது கட்டாயமாக்க ப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, அண்மையில் பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்ற 1035 பேருக்கு நாடு முழுவதும் வதிவிடப் பயிற்சி நெறிகள் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள ஐந்து மத்திய நிலையங்களில் இப்பயிற்சி நெறிகள் இடம்பெறவுள்ளன. இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள இப்பயிற்சி நெறியின் முதலாம் கட்டம் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இரண்டாவது கட்டம் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் 435 ஆசிரியர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். பயிற்சியின் பின்னரே இவர்கள் தங்களுக்குரிய பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
பயிற்சி நெறிக்கான கடிதம் கிடைத்தவுடன் உரிய மத்திய நிலையத்திற்கு சமூகமளிக்குமாறும் கல்வி அமைச்சு கோரியுள்ளது.
இப்பயிற்சி நெறிகள், மஹரகம தேசிய கல்விக் கல்லூரி, கண்டி மஹவலி தேசிய கல்விக் கல்லூரி, வேயாங்கொட சியனே தேசிய கல்விக் கல்லுாரி, களுத்துறை பஸ்துன்ரட்ட கல்விக் கல்லுாரி மற்றும் வவுனியா தேசிய கல்விக் கல்லூரி ஆகிய மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.