பான் கீன் மூன் கூறியமைக்காக வடக்கில் இராணுவத்தை குறைக்க முடியாது!
வடக்கிலுள்ள இராணுவத்தினர் குறைக்கப்பட வேண்டுமென அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருந்த நிலையில், அவ்வாறு குறைப்பை ஏற்படுத்த முடியாதென பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு தேவை ஏற்படும் பட்சத்திலேயே வடக்கு கிழக்கில் இராணுவம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், ஐ.நா கூறுகின்றது என்பதற்காக தேசிய பாதுகாப்பில் அவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்த முடியாதென மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் இராணுவம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், முழுமையாக இராணுவத்தை நீக்க வேண்டுமென்பதை பாதுகாப்பு தரப்பினரும் அரசாங்கமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்களென மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை மீது பாரிய அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதில்லையென ஐ.நா செயலர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், இது இலங்கைக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் தமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கு அங்கிருநது இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டுமென தமிழ் மக்களும் தமிழத் தலைமைகளும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.