போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகளில் இருந்து நழுவினார் பான் கீ மூன்
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நழுவினார்.
சிறிலங்காவுக்கான பயணத்தின் முடிவில் நேற்றுமாலை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தார்.
தனது சிறிலங்கா பயணம் தொடர்பாக சுமார் 8 நிமிடங்கள் பான் கீ மூன் விளக்கிக் கூறினார். இதையடுத்து, அவரிடம் கேள்விகளை எழுப்புவதற்கு ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
12 நிமிடங்கள் மாத்திரமே, செய்தியாளர்களுக்கு கேள்விகளை எழுப்ப சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. இதன்போது, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, செய்தியாளர்கள் பலரும் கேள்விகளை எழுப்பினர்.
எனினும், அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், தவிர்த்துக் கொண்டே, அடுத்த கேள்விகளுக்கு வாய்ப்பளித்தார்.
இதனால் போர்க்குற்றங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பிய ஊடகவியலாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.