இலங்கை தமிழர்கள் எவரும் தொடர்புபட்டிருக்கவில்லை ; பிரதமர்
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன். நாம் தமிழர் கட்சியின் மலேஷிய கிளையினரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றனர். இலங்கை தமிழர்கள் எவரும் இச் சம்பவத்தில் தொடர்பு பட்டிருக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அன்ஸார் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி.யான தினேஷ் குணவர்தன 23ஃ2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்இ குறித்த தாக்குதல் சம்பவத்தை
இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கிறது. சம்பவத்தை அடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க நாம் செயற்பட்டிருந்தோம். வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் அழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியினரே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த கட்சி இந்தியாவின் தமிழ் நாட்டில் இயங்கி வருகிறது. இதன் கிளையான நாம் தமிழர் இயக்கமொன்று மலேசியாவில் இருக்கிறது. இவர்களே இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதைவிடுத்து முன்னர் இலங்கையில் இருந்தவர்களோ அல்லது தற்போது இலங்கையில் இருப்பவர்களோ அல்லது இலங்கை பெற்றோரை கொண்டவர்களோ இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய தமிழர்களே ஆவர். அவர்களில் எவரும் இலங்கையர் கிடையாது.
நாம் தமிழர் கட்சியின் மலேசிய கிளைக்கு அந் நாட்டின் ஜனாநாயக செயல் கட்சியுடன் தொடர்பு இருக்கின்றது. போர்க்குற்றங்களுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்காக தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்காக மலேசியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கத்துவத்தை பெற்று பரிந்து பேச வேண்டும் என்று அந்த கட்சியின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலேசியாவில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் பற்றி நாம் எப்போதும் தேடியே வருகிறோம். நீங்கள் (கடந்த அரசாங்கம்) ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட கே.பி.யுடன் தான் புலிகளின் மலேசிய கிளைக்கு தொடர்பு இருந்தது. இவ்வாறு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை தீர்ப்பதற்காகத் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருகிறார்.
அமைச்சர்கள் எம்.பி.க்கள் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் தேவையான அனைத்து உதவி உபகார ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படுவதாகவும் எனினும் வெளிநாடொன்றுக்கு சென்றதன் பின்னர் அங்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கமே பொறுப்பாகும்.
செல்வோருக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. எனினும் இன்னுமொரு நாட்டுக்கு செல்லும் போது இங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளை கொண்டு அங்கு பாதுகாப்பு வழங்க முடியாது. அப்படியே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இலங்கையில் இருந்து சென்றாலுமே கூட அவர்களால் பாதுகாப்பு நடவடிக்கையின் நிமித்தம் ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியாது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று கேட்டால் அதற்கான பதிலை மலேசியா அரசாங்கமே வழங்க வேண்டும்.
எவ்வாறிருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவில் முகம் கொடுக்க நேர்ந்த சம்பவம் தொடர்பில் நாம் விசாரிக்கிறோம். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட நாம் இடமளிக்கமாட்டோம். மஹிந்த ராஜபக்ஷவுக்கான் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கடப்பட்டுள்ளது. பிரச்சினை எதுவும் இருந்தால் தீர்ப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம். எமது நாட்டில் இருந்து வெளிநாடொன்றுக் செல்லும் ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் என அனைவருக்கும் சம்பந்தப்பட்ட நாட்டினாலேயே பாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.
இதேவேளை புலிக் கொடியை ஏந்தியவாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக எழுப்பப்பட்ட விடயம் தொடர்பில் பதிலளித்த பிரதமர்இ அவ்வாறான செயற்பாடுகளை மலேசிய அரசினால் உடனடியாக நிறுத்த முடியாமல் போயிருக்கலாம் என்றும் இரத்தம் சிந்தும் நிலைமைகளை தவிர்க்க அவ்வாறான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம் இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்து மலேசிய அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்இ குற்றவாளிகள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் இனிவரும் காலங்களில் இம்மாதிரியான சம்பவங்கள் இடம்பெற வழிவிடாமல் இலங்கையுடனான உறவுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து மேலும் நெருங்கி செயற்பட எதிர்பார்ப்பதாகவும் மலேசிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் எமக்குரிய விடயமல்ல. இந்த சம்பவம் தொடர்பில் நாம் தேவையான சாட்சியங்களையும் விபரங்களையும் வழங்கத் தயாராக இருக்கிறோம்
ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அமைச்சர் தயா கமகே பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் தினேஷ் குணவர்தன எம்.பி. ஆகியோரை வழியனுப்பி வைக்க வந்திருந்த போதே இலங்கை உயர்ஸ்தானிகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தின் போது மேற்படி அதே மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கு இருந்திருக்கவில்லை.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடிவுற்றதும் என்ன நடந்தது என்பது தொடர்பில் முழுமையான அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.
இதன்போது குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த பிரதி அமைச்சர் அனோமா கமகே கருத்து வெளியிடுகையில்இ மாநாடு நடைபெற்ற போதும் மாநாட்டு மண்டபத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அங்கு மலேசிய அரசாங்கத்தினால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நாடு திரும்ப விமான நிலையம் வந்த போது மஹிந்த ராஜபக்ஷ உடன் வந்திருக்காமையினால் அவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி உயர்ஸ்தானிகர் அக்கறைப்பட்டிருக்காமல் விட்டிருப்பதற்கான வாய்ப்புக்கள்உள்ளன என்றார். .