Breaking News

கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதியின் மற்றுமொரு கசப்பான அனுபவம்



கடந்த வருடம் ஜனவரி 8 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை தோல்வியடையச் செய்யாதிருந்தால், நாட்டுக்கு என்ன நடக்கும் எனத் தெரியாது என்று என்னிடம் குற்றச்சாட்டை முன்வைத்த அனைவரின் பிரச்சினைகளுக்கும் செவிசாய்ப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

என்னை ஜனாதிபதியாக்கியதனால் மாத்திரம் திருப்தியடையாமல், என்னை ஜனாதிபதியாக்கியதன் நோக்கத்தை அடையும் வரையில் எனக்கு ஆதரவளித்த அனைவரும் என்னுடன் இருக்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கு செயற்பட்ட சகல சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற கசப்பான சம்பவம் ஒன்றையும் ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார்.

கடந்த அரசாங்கத்தில் நான் அமைச்சராக இருக்கும் போது, எனக்கு அவசரமாக வருமாறு, அரச மாளிகையிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அரச அழைப்பு என்பதனால், நான் தாமதிக்காது சென்றேன். எனது முன்னாள் தலைவர் மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். மத்திய வங்கியின் கூட்டமொன்றின் போது ஊழல் மோசடி தொடர்பில் பேசினீர்களா? என்ற கேட்டார். நான் அதற்கு ஆம் என்றேன்.

என்ன வேறு பயணம் செல்ல தயாராகின்றீர்களா? என்று எனது தலைவர் என்னிடம் அடுத்த கேள்வியை கேட்டார். நான் அன்றிலிருந்து தீர்மானம் எடுத்தேன். ஆம், நான் வேறு பயணம் செல்லத்தான் போகிறேன் என்று. அந்தப் பயணம் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகியது எனவும் ஜனாதிபதி இதன்போது நினைவுபடுத்தியுள்ளார்.