நான் இந்தியாவிற்கு போகத் தயார்! தனியாக போக மாட்டேன் – மனோகணேசன்
தமிழர்கள் இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றால் கலகொட அத்தே ஞானசார தேரரையும் அழைத்துக்கொண்டே செல்வேன் என்று அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “இலங்கையிலுள்ள தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும்” என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
அவ்வாறு இந்தியாவுக்கு அனுப்புவதானால், இங்கே வாழும் சிங்களவர், தமிழர் எல்லோரும் தான் இந்தியா போக வேண்டும் என அமைச்சர் பதிலளித்துள்ளார். நான் இந்தியாவிற்கு போகத் தயார். ஆனால், தனியாக போக மாட்டேன். அவரையும் அழைத்துக் கொண்டுதான் இந்தியா செல்வேன். விஜய இளவரசன் மத்திய இந்தியாவிலிருந்து இலங்கையின் மேற்கு கரைக்கு வந்தார். அவருடன் அவரது நண்பர்களும் வந்தார்கள். இங்கு வந்த அவர் வேடர் குல அரசியான குவேனியை மணம் புரிந்தார். பின்னர் வேடர் குல அரசியை விரட்டிவிட்டு, தென்னிந்தியாவில் இருந்த தமிழ் இளவரசியை அழைத்து வந்து திருமணம் புரிந்துக்கொண்டார்.
தமிழ் பெண்களையும் அழைத்து வந்து தன் நண்பர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார். எனவே பெண்களை தென்னிந்தியாவுக்கும், ஆண்களை மத்திய இந்தியாவுக்கும் அனுப்பி நாட்டை வேடர்களுக்கு கொடுத்து விடுவோமா? எடுத்ததுக்கு எல்லாம் தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டுவோம் என சொல்வது ஏன்? இந்த நாடு தமக்கு மட்டுமே சொந்தம்.
ஏனைய எல்லோரும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை இவர்கள் கைவிட வேண்டும். வடமாகாண முதல்வருடன் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோதுங்கள். அதற்காக அனைத்து தமிழரையும் விரட்டுவோம் என்று கூக்குரல் இட முடியாது. மீண்டும் நாம், கடந்த இருண்ட காலத்துக்குள் செல்ல முடியாது என அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கடுமையாக எச்சரித்துள்ளார்.