சிங்கள மொழியை கற்பதன் மூலம் எமது குறைகளை தீர்க்க முடியும் ; சி.வி
தமிழ் மக்கள் சிங்களத்தையும்,ஆங்கிலத்தையும் கற்பதன் மூலமே சிங்கள மக்களுக்கு எமது குறைகளை,எதிர்பார்ப்புக்களை, தேவைகளை எடுத்துக் கூற முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெறுமனே தமிழில் பாண்டித்தியம் பெற்று தமிழ் மக்களிடையே எமது கருத்துக்களை கொண்டு செல்வதால் எந்த நன்மையும் ஏற்படாது. அதனால் சிங்கள மக்கள் எமது உணர்வுகளையும்;தேவைகளையும் அபிலாசைகளையும் நேரடியாக உணராது விட்டு விடுகின்றார்கள். என அவர்குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது வருட நிறைவு கொண்டாட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரே நாட்டிற்குள் எம்முடைய தனித்துவத்தைப் பேணி ஒருமித்து வாழப் போகின்றோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோமானால் எமது சகோதர மொழியையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ளுவது அவசியமானது எனத் தெரிவித்த அவர், சகோதர மொழியைக் கற்பதால் சகோதர மக்களிடையே நிலவும் எம்மைப்பற்றிய தப்பபிப்பிராயங்களை நீக்க அது உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது எம்முடைய தனித்துவத்தை ஏற்றுக் கொள்ளும் ஒரு அரசியல் யாப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இதனால் அடுத்த கட்டமான நல்லிணக்கத்திற்கு சகோதர மொழிப் பாண்டித்தியம் உதவி புரியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, எமது பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் பல இங்கு செயற்படும் சில திணைக்களங்களின் முறையற்ற செயல்களினால் முடக்கப்படுகின்றன.
இரணைமடு குளக்கட்டு திருத்த வேலைகள் மாரிகாலத்திற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும் என செயலாற்ற விழைகின்ற போது வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு, கனியவள அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு திணைக்களங்களினதும் அதிகார சபைகளினதும் அளவுக்கு மிஞ்சிய தலையீடுகள் காரணமாக மேற்படி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 25000 ஏக்கர் வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கை எதிர்வரும் காலபோகத்தில் மேற்கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாரிகால கூடுதல் மழை வீழ்ச்சியின் போது குளக்கட்டுக்களின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகக்கப்படுவதனால் இதன் கீழ் வாழும் குடும்பங்கள் அச்ச நிலையில் வாழ்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பாக ஜனாதிபதி தனிப்பட்ட கவனத்தையும் செல்வாக்கையும் பிரயோகித்து வேலைகள் இடையூறின்றி நிறைவு செய்யப்பட ஆவன செய்ய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.