ஆயுதப் போராட்டத்திலும் அஹிம்சை உண்டென நிரூபித்தவர் திலீபன் : சிவஞானம்
ஆயுதப் போராட்டத்திலும் அஹிம்சை இருக்கும் என சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டிய தியாகி திலீபன், ஈழத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் முன்னுதாரணமாக இருப்பாரென நம்புவதாக வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் யாழில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் நடைபெற்ற தியாகி திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
அஹிம்சை வழியும் எமக்கு தெரியுமென்று உணர்த்த வேண்டுமென்பதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டலும் அதுவே என திலீபன் கூறியிருந்ததாக இதன்போது சிவஞானம் நினைவுபடுத்தினார்.
அர்ப்பணிப்புள்ள போராளியின் நினைவு அவன் மரணித்த மண்ணில் வரலாற்றினை கூற வேண்டுமென்பதோடு, தியாகி திலீபன் விடயத்தில் இது வெற்றியளிக்கும் என தாம் நம்புவதாகவும் சிவஞானம் இதன்போது குறிப்பிட்டார்.
அன்று தலைவர் பிரபாகரன் கூறியதை போன்று இன்று போராட்ட வடிவங்களை மாற்றிக்கொண்டு ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறிப்பிட்ட சிவஞானம், இலட்சியத்தினை அடைவதற்கு தியாகி திலீபன் மற்றும் பிரபாகரன் போன்றோரின் தியாக உணர்வும் ஆத்மாவும் தமிழ் மக்களை ஆசிர்வதிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அஹிம்சை மற்றும் ஜனநாயக வழிகளில் எமது போராட்டங்களை முன்னெடுத்து விடுதலை பெற வேண்டுமென்பதை ஜனநாயக போராளிகள் கட்சியும் மனதிற்கொண்டு செயற்பட வேண்டுமென வட மாகாண அவைத்தலைவர் சிவஞானம் இதன்போது வலியுறுத்தினார்.