வட மாகாணத்துடன் கிழக்கை இணைக்க முடியாது: முஜிபுர் ரஹ்மான்
வட மாகாணத்துடன் கிழக்கை பலவந்தமாக இணைக்க முடியாதென்றும், அவ்வாறாயின் கிழக்கு மக்களின் விருப்பத்தை அறிய சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் வடக்குடன் இணைந்து செயற்படுவதற்கு கிழக்கு மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யாழில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியின்போது, வடக்குடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இது நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடென முஜிபுர் ரஹ்மான் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் இவ்வாறான பேரணிகளை நடத்தியிருந்தால் ஏற்படும் விளைவுகளை வடக்கு முதல்வர் நன்கறிவார் என்றும், தற்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்து வடக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியென்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லையென வடக்கிலுள்ள எந்தவொரு தலைவரும் தெரிவிக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னின்று செயற்பட்டு வருகையில், கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்துவதோடு, அதற்கு ஒத்துழைப்பும் வழங்கவேண்டுமென குறிப்பிட்டுள்ள முஜிபுர் ரஹ்மான் இனவாத செயற்பாடுகளால் அதனை இல்லாமல் செய்துவிடக் கூடாதென மேலும் தெரிவித்துள்ளார்.