தேர்தல் தாமதம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தை கைநீட்ட வேண்டாம்
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் தனிப்பட்ட ஒருவரின் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணய பணிகளை மறுசீரமைப்பு செய்கின்றமையினாலேயே தேர்தல் காலதாம தமாகின்றது.
எனவே குறித்த விடயம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தை கைநீட்டும் உரிமை எவருக்கும் இல்லை என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் தனிப்பட்டவர்களின் தேவைகளுக்கு ஏற்பவே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான எல்லை நிர்ணய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் எல்லை பகுப்பு செயற்பாடுகளின் காரணமாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனை இன்று பலரும் விமர்சிக்கின்றனர். குறிப்பாக கடந்த அரசாங்கத்தினர் இந்த விவகாரம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தை கைநீட்ட முடியாது. காரணம் முன்னைய அரசாங்கத்தினால் தனிப்பட்ட ஒருவரின் தேவையை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட தேசிய எல்லை பகுப்பு செயற்பாடுகளை மறுசீரமைப்பு செய்கின்றமையினாலேயே தேர்தல் காலதாமதமாகின்றன்றது.
அதேநேரம் இந்த எல்லை நிர்ணய செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளிடத்திலும் ஆலோசித்து அது தொடர்பிலான கலந்துரையாடகள் மேற்கொள்ளப்பட்ட சகல மக்கள் குழுக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.