Breaking News

புலிகளுக்கு பணம் கொடுத்தேனா? : உண்மையை கூறுகிறார் மஹிந்த



2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுக்கு நிதி வழங்கினார் என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் நாளை (புதன்கிழமை) விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது சம்மேளனத்தில் உரையாற்றிய பிரதமரும், ஐ.தே.கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியமை தொடர்பில் உரையாற்றியிருந்தார்.

அதேபோல் பல அரசியல் மேடைகளிலும், ஊடகச் சந்திப்புக்களிலும் ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார்.

அத்துடன், நல்லாட்சியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மாத்தறையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது மூடி மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளியிட போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்திருந்தார்.

இவ்வாறான ஒரு அரசியல் நிலைமையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முக்கியமான ஒரு அறிவிப்பை நாளை (புதன்கிழமை) வெளியிட உள்ளதாக அவரது பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார்.