உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினைக்கு சட்டப்படி நடவடிக்கை! வடக்கு முதல்வர் உறுதி!!
யாழ்.உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை தொடர்பாக சட்டத்திற்கமைய சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க சிலோன் மிஷன் திருச்சபையின் முன்னாள் தலைவர் அன்னப்பா ஜெயக்குமார் கூறியுள்ளார்.
உடுவில் மகளிர் கல்லூரியில் முன்னர் கடமையாற்றிய அதிபரை கல்லூரியின் ஆளுநர் சபையானது திட்டமிட்டே அவரை பதவியில் இருந்து ஒய்வு படுத்தி, புதிய அதிபரை நியமித்துள்ளதாக குற்றம்சாட்டியும் முன்னைய அதிபரையே மீண்டும் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கல்லூரியின் மாணவிகள், பழைய மாணவிகள், பெற்றோர்கள் கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, இவ்விடயம் தொடர்பாக யாழ்.வந்திருந்த ஜனாதிபதியிடமும் கல்லூரியின் மாணவிகளால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து இப்பிரச்சினை தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரிய .நடவடிக்கைகளை எடுப்பார் என ஜனாதிபதி அன்றைய தினமே அறிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் மாணவிகளும் அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்த அருட்தந்தைகள் சிலரும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இக் கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தை அமெரிக்க சிலோன் மிஷனினது முன்னாள் தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
நாம் அமெரிக்க மிஷனினை சார்ந்தவர்கள். எங்களினூடாகவே கல்லூரிக்கான நிதி வழங்கப்படுகின்றது. அந்தவகையில் தற்போது உடுவில் மகளீர் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக முதலமைச்சருடன் பேசியிருந்தோம்.
அவர் எமது பிரச்சனைகள் தொடர்பாக ஆவலுடன் கேட்டறிந்ததுடன் இது தொடர்பாக தாம் முன்னரே அறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக இக்கலந்துரையாடலில் முதலமைச்சரிடம் வலியுறுத்தியது பிள்ளைகள் கல்வி கற்பதற்குரிய சூழல் தற்போது அக் கல்லூரியில் இல்லை என்பது தொடர்பாகவும் பிள்ளைகள் தொடர்ச்சியாக நிர்வாகத்தினால் தாக்கப்படுகின்றமை தொடர்பாகவுமே.
இதன்போது மாணவிகளும் முதலமைச்சிரிடம் தமது பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்திருந்தார்கள்.
கல்லூரியில் கல்வி கற்கக்கூடிய ஒர் சூழல் இல்லை என்பதையும் முன்னைய அதிபரே தொடர்ந்து சேவையில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் அதனூடாக தமது கற்றல் செயற்பாடுகளுக்கு எவ்வாறு பக்கபலம் கிடைக்கும் என்பன தொடர்பாகவும் தெரிவித்திருந்தார்கள்.
இவற்றை விட அரசியல் சார்ந்தவர்களாலும் அரசியல்வாதிகளாலும் அவர்களது அடியாட்களாலும் தாம் தொடர்ச்சியாக மிரட்டப்படுவதாகவும் அவர்கள் முதலமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் தெரிவிக்கையில் இப் பிரச்சினை தொடர்பாக தம்மால் சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
அவர் கூறியது எமக்கு நம்பிக்கையாக இருந்ததுடன் இப்பிரச்சனை தொடர்பில் சுமுகமான தீர்வொன்று எட்டப்படும் எனவும் தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.