முல்லைத்தீவில் படையினர் வசமுள்ள காணிகளை மீட்டுத்தருமாறு மக்கள் கோரிக்கை
ஐக்கிய நாடுகளின் அறிக்கைகளின் படி 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மக்களின் 19 ஆயிரத்து 527 ஏக்கர் காணிகள் ஸ்ரீலங்கா இராணுவம் கடற்படை உட்பட அரச படையினர் வசமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு எட்டு ஆண்டுகள் பூர்த்தியடைவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையிலும், சிங்கள குடியேற்றங்களுக்காகவும், படையினரின் தேவைக்காகவும் தமிழ் மக்களுடைய காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்துகின்றார்.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்த நிலையில் பேரழிவுகள் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய காணிகள் திட்டமிட்ட ஸ்ரீலங்கா அரசினாலும், படையினராலுவும் கையகப்படுத்தப்பட்டு வருவதாக மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.
1984ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்கிராமங்களான கொக்குளாய், கொக்குத்தொடுவாய், மணலாறு உள்ளிட்ட கிராமங்களிலிருந்து மக்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், மகாவலி அதிகார சபையினால் தமிழ் மக்களுடைய இரண்டாயிரத்து 524 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோட்டைகேணி பிள்ளையார் கோவிலடியில் உப உணவு பயிர்செய்கைக்கான 825 ஏக்கர், கொக்கிளாய் விகாரை நிலம் 4 ஏக்கர், கொக்கிளர் இல்மனைட் தொழிற்சாலைக்காக எடுக்கப்பட்டுள்ள 44 ஏக்கர், கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் சிங்கள மக்கள் உள்ள 2 ஏக்கர் காணி என 3399 ஏக்கர் மற்றும் தமிழ் மக்களுடைய விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
கருவேப்பம் முறிப்பு குளம் 201 ஏக்கர், பாலங்குளம் 150 ஏக்கர், துவரங்குளம் 200 ஏக்கர் என மொத்தமாக 1451ஏக்கர் நிலம் ஆகியவை உள்ளடங்கலாக மொத்தமாக சுமார் 20 ஆயிரத்து 958 ஏக்கர் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அலுவலகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
அவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் 2012ஆம் ஆண்டு மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் தமது குடியிருப்புக் காணிகள் மாத்திரமே மீளக்கையளிக்கப்பட்டதாகவும் எனினும் பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ளும் விவசாயக்காணிகள், விடுவிக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நாயாற்றில் நிந்தகைகுளம் பகுதியில் தமிழ் மக்களின் ஆளுகையில் இருந்த சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பு தமக்குரியதென வனவள பாதுகாப்பு திணைக்களம் அடையாளப்படுத்தி அந்தக் காணிகளை மக்களிடம் வழங்க மறுத்துவருவதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.
இதேவேளை தமது காணிகளில் இருந்த பயன்தரு மரங்களை அழித்துள்ள இராணுவத்தினர், காணிகளை தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கும் மக்கள் தமது பரம்பரை காணிகளை இராணுவத்திடமிருந்து மீட்டு தருமாறும் கோரிக்கை விடுகின்றனர்.
இதேவேளை கடற்படையினரும் அதிகளவான காணிகளை அபகரிப்பதால் சிங்கள குடியேற்றம் ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிக்கின்றார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கும் வடக்கு மாகாணசபையின் மற்றுமொரு உறுப்பினரான அன்ரனி ஜெகநாதன், இவ்வாறான திட்டமிட்ட நில அபகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
தமது விவசாயக்காணிகள் இராணுவத்தின் வசம் காணப்படுவதால் பொருளாதார ரீதியாக தாம் பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கும் வட்டுவாகல் மக்கள், தமது காணிகளை கடற்படையினரிமிருருந்து விடுவித்து தருமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்காக இவர்கள் பல தடவைகள் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்த போதிலும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என மக்கள் கூறுகின்றனர்.