Breaking News

"எழுக தமிழ்" தமிழ் பேரணியை தடுத்தால் ஆபத்து - கூட்டமைப்பு எச்சரிக்கை

எழுக தமிழ்' மக்கள் பேரணியை தடுத்தால் ஆபத்தான நிலைமையை நாடு எதிர்நோக்க வேண்டி ஏற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்களின் சார்பில் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் இரும்புக் கரங்கொண்டு அடக்கப்பட்டமையாலேயே ஆயுதப் போராட்டம் உருவானது.

இவ்வாறான வரலாற்றுப் படிப்பினைகளைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவிருக்கும் 'எழுக தமிழ்' மக்கள் பேரணியை தடுக்க இராணுவத்தினரோ அல்லது புலனாய்வுப் பிரிவினரோ முயற்சிக்கக் கூடாது.

தற்போதைய அரசாங்கம் கடந்த அரசாங்கம் பயணித்த பாதையிலேயே பயணிக்கிறது. மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்கள் விவகாரம் என்பவற்றில் இதுவரை எந்தவொரு உறுதியான தீர்வும் வழங்கப்படவில்லை.

இந்நிலையிலேயே, 'எழுக தமிழ்' மக்கள் பேரணி நடைபெறவுள்ளது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் யுவதிகள், புத்திஜீவிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதனை முடக்குவதற்கு அல்லது குழப்புவதற்கு இராணுவத்தினரோ அல்லது புலனாய்வுப் பிரிவினரோ முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு முயற்சித்தால் அது நாட்டை ஆபத்தான நிலைக்கே இட்டுச்செல்லும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.