ராம்குமார் தற்கொலை! கேள்விக் குறியாகும் சிறை பாதுகாப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் சக கைதியால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
அடுத்தடுத்து சிறைகளில் நடைபெறும் இந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது சிறைச்சாலைகளில் உள்ள பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் உள்ளார் பேரறிவாளன்.
இவர் ஒரு ஆசிரியர் போல் அங்குள்ள சக கைதிகளுக்கு பாடம் கற்பித்து கொண்டிருந்த நிலையில், சக கைதியான ராஜேஷ் கண்ணா இரும்பு கம்பியால் தலையில் அடித்து தாக்கியுள்ளார்.
இதனால் பேரறிவாளனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. பேரறிவாளன் ஏன் தாக்கப்பட்டார்.
ராஜேஷ் கண்ணா யார்? அவர் கையில் இரும்பு கம்பி எப்படி கிடைத்தது? இப்படி பல கேள்விகளுக்கு சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மற்றொரு முக்கிய வழக்கான சுவாதி கொலை வழக்கில் சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறை அறையில் இருந்த மின்கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசாரால் சொல்லப்படுகிறது.
எப்படி ஒரு சிறை அறையில் உள்ள மின்கம்பியை ஒரு கைதி கடித்து தற்கொலை செய்து கொள்ள முடியும்? அப்படி முடியும் என்றால் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது?
சிறையில் பாதுகாப்பு பணியில் போலீசார் எவ்வளவு அலட்சியமாக இருக்கின்றனர் என்பது பற்றி எல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.