நல்லிணக்க செயலணியின் மக்கள் கருத்தறியும் குழுவின் அமர்வு யாழ்ப்பாணத்தில்
நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் மனோரி மத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குழுவினரின் மக்கள் கருத்தறியும் செயலமர்வு யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
யாழ்ப்பாணம் கச்சேரியில் இன்று சனிக்கிழமை காலை முதல் இந்த அமர்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த செயலணி உருவாக்கப்பட்டது.
இந்த நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியானது உண்மை, நீதி, இழப்பீடு, மீள் நிகழாமை போன்றன தொடர்பாகவும் காணமல் போனோரின் விடயங்களை கையாள்வதற்கான அலுவலகம் அமைப்பது தொடர்பாகவும் மற்றும் வேறு சில விடயங்கள் தொடர்பாகவும் மக்களின் கருத்துக்களை அறிவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணியானது ஸ்ரீலங்கா முழுவதும் தனது அமர்வுகளை நாடாத்தி காணமல் போனவர்களது உறவினர்கள், யுத்த்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சகல தரப்பினர்களிடமிருந்து கருத்துக்களை பெற்றுவருகின்றது.
இந்த குழுவினரின் மக்கள் கருத்தறியும் செயற்பாடு திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது யாழ் மாவட்டத்தில் 5ஆவது அமர்வை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.