Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலை காலத்தின் கட்டாயமாகும்



குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின் அடிப்படையிலாவது விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம், கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இலங்கை அரசு சர்வதேச ரீதியில் பல சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில், இப்பிரச்சினை மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தும்.

எந்தவித குற்றச்சாட்டுகளுமின்றி சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நான் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளேன்.

கடந்த காலங்களில் பல அரசியல் கைதிகள் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதுபோன்று நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசியல் கைதிகள் பிரச்சினை ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையாக பார்க்காது, இதனை பொதுப் பிரச்சினையாகக் கருதவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.