பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுடன் இன்று அரசாங்கம் பேச்சுவார்த்தை
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விசாரா தொழிற்ச ங்கங்களின் பிரதிநிதிகளுடன் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (08) காலை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இந்த இரு தரப்புக்கும் இடையில் நேற்று முன்தினம் (06) பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதன் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று (07) நடைபெற இருந்த போதிலும் அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையிலேயே இன்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இன்றைய பேச்சவார்த்தையின் போது சாதகமான வாக்குறுதிகள் கிடைக்கப் பெறும் எனவும் தொழிற்சங்கங்களின் கூட்டு ஒன்றியத்தின் செயலாளர் தம்மிக எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.
இந்த கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தினால் நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது