Breaking News

மஹிந்தவின் வாயை அடைப்பதற்கே நாமல் மீது சித்திரவதை;காமினி சாடல்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வாய்மூடவைப்பதற்காகவே அவரது புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நல்லாட்சி அரசாங்கம் அடிக்கடி கைது செய்து, சித்திரவதை செய்துவருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நிதிமோசடி குற்றச்சாட்டில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரை பார்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே நேற்று பகல் வெலிக்கடை சிறைக்கு விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பிய அவர் சிறை வளாகத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

“மஹிந்த ராஜபக்சவை வாய்மூடவைப்பதற்காகவே. நாமல் ராஜபக்ச மீது அரசாங்கம் தொடர் தாக்குதல் நடத்துவதற்கு காரணம். தனது புதல்வரை கஷ்டப்படுத்தினால் எந்த தந்தையாக இருந்தாலும் சரி, அதிர்ந்துவிடுவார்தானே. அப்படியான எதிர்பார்ப்பிலேயே இவ்வாறு செய்யப்படுகின்றது. ஜே.ஆர். ஜயவர்தன, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு எதிராக விசேட ஆணைக்குழுவொன்றை அமைத்து இதனையே செய்திருந்தார். 

அவரது உதவியாளர்களே இன்று நாட்டை ஆட்சிசெய்வதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவர்களே ஆலோசனையும் வழங்கிவருகின்றனர். எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்சவுக்கு இதனை செய்வது குறித்தே அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். ஆனாலும் எதனையும் சந்திப்பதற்கு நாம் தயார். அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு ஆதரவாக குரல்கொடுக்க எவரும் இருக்கவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல, மக்கள் குரல்கொடுக்க தயாராகியிருக்கிறார்கள்” - என்றார்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அடுத்து கைது செய்யப்படுபவர் யார் என்று சில அடையாளங்களை சுட்டிக்காட்டி சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கருத்து வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்தும் காமினி லொக்குகேவிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர்,

“அடுத்து கைது செய்யப்படுபவர் யார் என்பதை பொலிஸார் கூறுவதற்கு முன்னதாக அரசியல்வாதிகளே தெரிவிக்கின்றார்கள். ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள அடுத்து கைது செய்யப்படுவரது அங்க அடையாளங்கள் தொடர்பில் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்திருக்கிறார். அவர் யார் என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் அது நான் அல்ல. நான் கைது செய்யப்படுவேனோ என்பதும் எனக்குத் தெரியாது” - என்றார்.