கண்ணீரை துடைக்கவே காணாமல்போனோர் சான்றிதழ்
காணாமல்போனோரின் குடும்பங்களின் கண்ணீரைத் துடைக்க நாம் ஐ.நா.வுக்கோ நரகத்திற்கோ செல்லவில்லை. மாறாக எமது நாட்டு பாராளுமன்றத்திலேயே அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்கிறோம் என வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சபையில் தெரிவித்தார்.
காணாமல்போன படையினருக்கும்நியாயம் கிடைக்கும் சட்டமூலத்தையே சபையில் முன்வைத்துள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதனை பெற்றுக் கொள்ள அரசு உதவ வேண்டும்.
1990 களில் எனது நண்பர் மஹிந்த ராஜபக் ஷ இச் சபையில் காணாமல் போனோர் தொடர்பாக பேசுகையில் பெற்றோரின் கண்ணீரை துடைக்க ஐ.நா.அல்ல நரகத்திற்கும் போகத் தயார் என்றார்.
நாம் இன்று ஐ.நா.வுக்கோ நரகத்திற்கோ போகவில்லை. மாறாக இலங்கையின் பாராளுமன்றத்திற்குள்ளேயே அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளோம். இச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் பெற்றோரின் கண்ணீரை எம்மால் துடைக்க முடியும்.
சாதாரண நபர்கள் மட்டுமல்ல படையினரும் காணாமல் போயுள்ளனர். பல வருடங்கள் கடந்தும் இவர்கள் தொடர்பில் தகவல்கள் இல்லை. மரணம் உறுதிப்படுத்தப்பட்டால் அதற்கான சாட்சியங்கள் இருந்தால் மரண சான்றிதழ் வழங்கலாம். எனவே மரணத்திற்கும் காணாமல் போனதற்கும் இடையே வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.
காணாமல் போனோர் உயிருடன் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையுடனேயே அவர்களது உறவினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் காணாமல் போனோர்களின் குடும்பங்களைச் சார்ந்தோர் பல்வேறு சட்டச் சிக்கல்களுக்கும் முகம் கொடுக்கின்றனர்.
இச் சான்றிதழ் வழங்குவதால் காணாமல் போனமை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமையும். எதிர்கால சந்ததியினர் இச் சாபத்திலிருந்து விடுபட வேண்டும். காணாமல் போனோர் என்பது வரலாற்றுக்குள் மட்டும் வரையறுக்கப்பட வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் சட்டமூலங்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன. 18 ஆவது திருத்தத்தினை நிறைவேற்ற சர்வதிகார ஆட்சியை முன்னெடுக்க முயற்சிக்கப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியில் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு அவசரமாக சட்டமூலங்களை நிறைவேற்றுவது தடுக்கப்பட்டுள்ளது.
இன்று அவசர சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவதில்லை என்றார்.