முன்னாள் போராளிகள் விவகாரம் : வட மாகாண சபையில் தர்க்கம்
முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு உண்மை கண்டறியப்பட வேண்டுமென கடந்த வட மாகாண சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நேற்றைய வட மாகாண சபை அமர்வில் இதுகுறித்து தர்க்கிக்கப்பட்;டது.
முன்னாள் போராளிகளின் பிரச்சினை குறித்து இதன்போது கருத்து வெளியிட்ட மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன், ”முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு முன்னாள் போராளிகள் மீது பலருக்கும் அக்கறை வந்துள்ளது. முன்னாள் போராளிகள் தொடர்பான தகவல்கள் எவரிடமாவது உள்ளதா? மேலும் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டமை தொடர்பாக மாகாணசபை எடுக்கும் நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடியும். அதன் பின்னர் சர்வதேசத்தின் முன் தமிழ் மக்களும் முன்னாள் போராளிகளும் பொய்யர்கள் ஆக்கப்படுவர். அதற்கு மாகாணசபையே பொறுப்பு” என்றார்.
இதற்கு பதிலளித்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், நல்லிணக்க செயலணியிடம் முன்னாள் போராளிகள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவ்விடயம் கையாளப்படும் என்றும், அதனை பிழையென்று கூற முடியாதெனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறெனினும், முன்னாள் போராளிகளுக்கு அமெரிக்க மருத்துவ குழுவால் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
\