பௌத்த விகாரை விவகாரம் தொடர்பில் பிரதமருடன் அடுத்த வாரம் கலந்துரையாடல்
தமிழர் தாயக பிரதேசங்களில் கட்டப்பட்டு வரும் பௌத்த விகாரைகள், குடியேற்றங்கள், மீள்குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமருடன் அவசர கலந்துரையாடல் ஒன்றில் அடுத்த வாரம் ஈடுபடவுள்ளதுடன் மேற்கண்ட பிரச்சினைகளுக்குத் தெளிவான முடிவு எட்டப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதேசங்களில் பெளத்த மேலாதிக்க
சிந்தனையில் விகாரைகள் அமைத்தல், திட்டமிட்ட குடியேற்றங்கள், இடம்பெயர்ந்து வாழும் மக்களின் மீள் குடியேற்றங்கள், பனை அபிவிருத்தி சங்கத்தின் நிலைப்பாடுகள் , வடக்கு கிழக்கு மாகாண நிர்வாக சீர்கேடுகள் தொடர்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை பாராளுமன்ற கட்டட பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் தமிழர் தாயாகப் பிரதேசத்தில் இராணுவத் தேவைக்காக பெருமளவான தமிழ் மக்களுக்கு சொந்தமாண காணிகளை சுவிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த விடயங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாம் துறைசார்ந்த, அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகளுடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறும் சந்திப்பில் பதிலை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த வாரம் முதல் தொடர்ச்சியான சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் மேற்கொண்டு வடக்கு கிழக்கில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதேவேளை நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்தரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராச, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.