Breaking News

இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் காணாமல் போனமைக்கு ஆதாரம் இல்லை: மஹிந்த



இலங்கையில் கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான 25 ஆண்டுகளில் காணாமல் போனோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 750 என பலவந்தமாக கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர் பில் ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பொதுமக்கள் காணாமல்போனார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்த கருத்து தெரிவித்த அமைச்சர், காணாமல் போனோர் தொடர்பான விசாரணை என்பது வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. குறித்த விசாரணைகள் முழு நாட்டிற்கும் தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைய வேண்டும்.

மேலும், 1970ஆம் ஆண்டுகளில் இருந்து இலங்கையில் நடைபெற்ற கலவரங்களில் காணாமால்போனோர் தொடர்பிலும் பூரண விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். சிங்கள மக்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் தொடர்பிலும் உண்;மை கண்டறியப்பட வேண்டும். காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகளின் போது வெறுமனே வடக்கு, கிழக்குப் பகுதிகளை மாத்திரம் அடையாளப்படுத்த முடியாது. அத்துடன், நாட்டை காப்பாற்றிய, மக்களுக்காக போராடிய இராணுவத்தை காவுகொடுக்க நாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.