Breaking News

கொக்குளாயில் விகாரை அமைத்தே தீருவோம்! - ராஜித



முல்லைத்தீவு - கொக்குளாய் பிரதேசத்தில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ அல்லது வேறு எவருக்கோ கிடையாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதிபடக் கூறியுள்ளது.

கொக்குளாய் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் அப்பிரதேச மக்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் நிலையிலேயே அரசாங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பகல் நடபெற்றது.

இதன்போது கொக்குளாய் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் எழுந்துள்ள எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, சிங்கள கிராமம் எங்கு அமைய வேண்டும் என்பது தொடர்பில் கூட்டமைப்பினரால் தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

“யுத்தம் முடிவுற்ற பின்னர் அமைச்சரவையில் சிங்கள அமைச்சர்கள் இருந்த போதிலும் நான் ஒருவனே கொக்குளாய் பகுதிக்கு விஜயம் செய்திருந்தேன். கொக்குளாய் பகுதியில் உள்ள மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி இன்றும் என்னிடமே வருகின்றனர். ருக்மால் என்ற நபர் அங்குள்ள மீனவக் குழுத் தலைவராக உள்ளார். கொக்குளாய் மற்றும் நாயாறு ஆகிய இரண்டு பகுதிகளையும் தமிழீழ விடுதலைப் புலிகளே அழித்திருந்தனர். 

இவ்வாறான பிரச்சினைகள் மத்தியிலும் அங்குள்ள மக்கள் முகங்கொடுத்து வந்தனர். எனினும் சிங்கள மக்களது தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் எவரும் அப்பகுதிக்கு செல்லவில்லை. இன்றுதான் அந்த பிக்குவைப் பற்றிப் பேசுகின்றனர். அந்தப் பிக்கு தொடர்பில் எதுவும் இல்லை. அங்கு வீதிகளை செப்பனிட, தண்ணீர் வசதி பெற்றுக்கொடுக்க, வீட்டு வசதிகளை செய்துகொடுக்க நானே யோசனைகளை முன்வைத்திருந்தேன். அங்கு பலதரப்பட்ட அழுத்தங்கள் காணப்படுகின்றன. எனினும் இதுபற்றி பேசுகிறவர்களது பேச்சுக்கள் அனைத்தும் சட்டமாகிவிடாது.

சிங்கள கிராமம் எங்கு அமைய வேண்டும், தமிழ் கிராமம் எங்கு அமைய வேண்டும் என்பது குறித்து அவர்கள் தீர்மானிக்க முடியாது. இம்மக்கள் முன்பிருந்தே கொக்குளாய் சிங்கள கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களுக்கு வழிபாட்டுத்தலம் தேவை என்றால் அங்கு அமைக்க முடியும். விகாரை வேண்டுமா, தேவையில்லையா என்பது தொடர்பில் வேறு எவரும் தீர்மானிக்க முடியாது” - என்றார்.