Breaking News

வலி.வடக்கில் 460 ஏக்கர் காணி ஒரு வாரத்திற்குள் விடுவிப்பு



வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மேலும் 460 ஏக்கர் பொதுமக்களின் காணியை மீள்குடியேற்றத்திற்காக விரைவில் உரிமையா ளர்களிடம் கையளிக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் உறுதிசெய்தது.

ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலிலேயே மேற்படி காணி விடுவிப்பு உறுதிசெய்யப்பட்டது.


வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி செயலகததில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் கலந்துகொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர்கள் வலி.வடக்கின் மிள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதி செயலாளரிடம் கேட்டிருந்தனர். இதற்கு வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள காங்கேசன்துறை(ஜே.233,) காங்கேசன்துறை மததி (ஜே.234), காங்கேசன்துறை மேற்கு (ஜே-235), பளை , வீமன்காமம் (ஜே.236), தையிட்டி (ஜே.250) போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள 460 ஏக்கர் காணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதுமட்டுமன்றி காங்கேசன்துறையில் ஏற்கனவே விடுவிக்கப்படடு பொலிஸார் நிலைகொண்டுள்ள காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டமாக குறித்த பகுதிகளை விட்டு வெளியேறுமாறு பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் கடிதமும் அனுப்பி வைக்கப்படும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிலஞானசோதி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி , தெல்லிப்பளை பிரதேச செயலர், காணித் திணைக்கள அதிகாரிகள். வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்களும் கந்துகொண்டிருந்தனர்.