வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலஅபகரிப்பு விவகாரம்
வடக்கிலுள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது. தனியார் நிலங்களைக் கையகப்படுத்துவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக சமூகத்தைத் தவறாக வழிநடத்துவதாகவும் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனினும், வடக்கிலுள்ள தனியார் காணிகளைத் தாம் கையகப்படுத்துவதற்கான எவ்வித நகர்வையும் முன்னெடுக்கவில்லை என சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக மேலும் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான எவ்வித தேவையும் காணப்படவில்லை என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ‘த சண்டே லீடர்’ ஊடகத்திடம் தெரிவித்தார்.
வெளிப்படையாக மக்களின் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் அதேவேளையில், வடக்கின் சில பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினரால் நில அபகரிப்புக்களும் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். கடந்த வாரம் முல்லைத்தீவில் காணி அபகரிப்பு முயற்சி இடம்பெற்ற போது இதனைப் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தியதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
‘இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவின் வட்டுவாகலில் உள்ள சில தனியார் காணிகளை நிரந்தரமாகத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கடற்படையினர் இறங்கியுள்ளனர்’ என அவர் மேலும் குறிப்பிட்டார். இந்தப் பகுதியைச் சேர்ந்த 617 ஏக்கர் நிலங்களை கடந்த வியாழக்கிழமை நில அளவைத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அளக்க முற்பட்டதாகவும், இதனை எதிர்த்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதால் இறுதியில் அந்த முயற்சி இடைநிறுத்தப்பட்டதாகவும் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.
‘இந்தப் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை நிலங்கள் பொதுமக்களுக்குச் சொந்தமானதாகும். ஆனால் தற்போது இது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் தற்போது இந்த நிலத்தை நிரந்தரமாகத் தமக்குச் சொந்தமாக்க முயற்சிக்கின்றனர்’ என சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம் சுமத்தினார். சிறிலங்கா கடற்படையினர் இந்தப் பகுதியைச் சூழவும் வேலிகள் அமைத்துள்ளதால் நில உரிமையாளர்கள் கூடத் தமது நிலத்தைச் சென்று பார்வையிட முடியாத நிலை காணப்படுவதாகவும் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் விசுவமடு உட்பட வடக்கின் சில பகுதிகளைச் சேர்ந்த 100 வரையான காணிகள் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலங்களில் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
இதேவேளையில், தனியார் காணிகளைக் கையகப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் கோட்பாடு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசிற்குச் சொந்தமான நிலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் தேவைக்குப் பயன்படுத்தும் நடைமுறையையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளது.
‘தனியார் நிலங்களைக் கையகப்படுத்துதல் அல்லது பொதுமக்களின் குடியிருப்புக்கள் மத்தியில் உள்ள அரசநிலங்களில் இராணுவ முகாங்களை அமைத்தல் போன்றவற்றை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்த்து நிற்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தனியார் காணிகளை சிறிலங்கா அரசாங்கமானது கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை எதிர்த்துப் பல்வேறு அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள 617 ஏக்கர் தனியார் காணிகளை கடற்படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதானது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
30 ஆண்டு கால யுத்தத்தின் பின்னர் தற்போது நாட்டில் இயல்புநிலை திரும்புவதாகவும், ஆனால் தற்போதும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களின் நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இவ்வாறான சில பிரச்சினைகள் வடக்கில் அதிகம் இடம்பெறுவதால் மக்கள் மத்தியில் குழப்பநிலை காணப்படுவதாகவும் ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டினார்.
‘அரசாங்கமானது சில பிரச்சினைகளுக்குத் துரித தீர்வை எட்ட வேண்டிய நிலையிலுள்ளது. இந்தவேளையில், வடக்கில் இராணுவ முகாங்களை அமைப்பதில் அரசாங்கம் தீவிரம் காட்டிவருகிறது. வடக்கில் இராணுவ முகாம் அமைப்பதற்கான அவசர தேவை ஏற்பட்டால் அதனை வெளிப்படையாகக் கூறவேண்டும்’ என ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது நிலையிலிருந்து இறங்கி அரசாங்கத்திற்கு தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வரும் நிலையில், அரசாங்கத்தின் இவ்வாறான சில செயல்கள் கூட்டமைப்பிற்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகவும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.
‘சிறிலங்கா அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துவதற்கு நில விவகாரம் போதுமானதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இதில் அங்கம் வகிக்கும் தனியொரு கட்சியின் நலனிற்காக தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் புதிய இராணுவ முகாங்கள் அமைப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இயலாது எனில், அவர்கள் தமது பதவிகளிலிருந்து விலகவேண்டும் என நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு புதிய இராணுவ முகாங்களை அமைப்பதற்கு அனுமதிப்பதன் மூலம் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்கனவே நிலவி வரும் அரசாங்கம் தமது பிரச்சினைகளை ஒருபோதும் தீவிரமாகக் கரிசனை கொள்ளாது என்கின்ற கருத்தை மேலும் நியாயப்படுத்த வழிவகுக்கப்படும்’ என ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் எரிச்சலை உண்டு பண்ணுகின்றன என்பதால் இவற்றுக்கு எதிராகக் கண்டனங்களை முன்வைக்க வேண்டும் என்பதை இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த நியாயமாகச் சிந்திக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என ஆனந்தசங்கரி கூறினார்.
‘பொதுமக்கள் வாழும் பகுதிகளைத் தவிர்த்து முக்கிய இடங்களில் ஒன்று அல்லது இரண்டு இராணுவ முகாங்கங்களை அமைக்கலாம். இதைவிட அதிகமான இராணுவ முகாங்களை அமைப்பதால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகுகின்றனர். ஏற்கனவே இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடம் மக்கள் முறையீடு செய்துள்ள போதிலும் இது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளைத் துறப்பதற்கான நேரம் வந்துவிட்டது என நான் நினைக்கிறேன்’ என ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
எனினும், இவ்வாறான காணி அபகரிப்புக்கள் இடம்பெறுவதாகத் தனது அமைச்சு அறியவில்லை எனவும் தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தளவில் இராணுவத் தேவைக்காக காணியை அபகரிக்க வேண்டிய நிலை காணப்படவில்லை எனவும் புதிய முகாங்களை அமைப்பதற்கான தேவை தற்போது இல்லை எனவும் சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
‘காணி அபகரிப்புச் சம்பவங்கள் எந்த இடங்களில் இடம்பெறுகின்றன என்பதை திரு.ஆனந்தசங்கரி எம்மிடம் தெரிவித்தால் நாங்கள் இது தொடர்பாக ஆராய்வோம். ஏனெனில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை விடுவித்து மக்களை மீள்குடியேற்றுவதற்கான செயற்திட்டம் தொடர்பில் எமது அமைச்சானது பாதுகாப்பு அமைச்சுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறோம்’ என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
புதிதாக நிலங்களை இராணுவத்தினர் அபகரிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அமைதி காப்பதாகவும் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். தனியார் நிலங்களை மக்களிடம் கையளிப்பதுடன் வடக்கு மற்றும் கிழக்கில் இயல்புநிலையைத் தோற்றுவிக்க வேண்டும் எனவும் தொடர்ந்தும் அனைத்துலக சமூகமானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
இந்த விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் பேரவை உறுப்பினர்களாலும் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளராலும் கேள்வி எழுப்பப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.