குற்றச்சாட்டை பகிரங்கமாக சுமத்திவிட்டு விசாரணையை அந்தரங்கமாக நடத்துவதா?
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டை வெளிப்படையாக சுமத்திவிட்டு விசாரணையை மாத்திரம் அந்தரங்கமாக நடத்துமாறு கோருவது முறையல்ல என தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விசாரணை மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு களங்கம் விளைவுக்கும் எண்ணம் கனவிலும் இருந்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது விசாரணை கோரும் பிரேரணை மீதான விவா தத்தின்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என வட மாகாண சபை உறுப்பினர்கள்தான் என்னிடம் முதலில் கோரிக்கை முன்வைத்தனர்.
முதலில் அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது கட்சி, மாவட்டம், நிபுணத்துவம் ஆகிய அடிப்படை யிலேயே நியமிக்கப்பட்டனர். எனக்கு எந்த அமைச்சரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆகவே அவர்கள் மீது எந்த விருப்பு வெறுப்பும் கிடையாது. எனவே இந்த பிரேரணை வெளிப்படையான முறையில்தான் கொண்டு வரப்பட்டது. அதேபோல் நானும் வெளிப்படையாகத்தான் நடக்கின்றேன்.
தான்தோன்றித்தனமாக நடக்க வில்லை. இது விடயத்தில் அமைச் சர்கள் மீது முன்வைக்கப்பட குற்றச்சாட்டை பத்திரிகைகளும் வெளிப்படுத்தி உள்ளன. இது பொதுமக்கள் மத்தியிலும் சென்றுள்ளது. எனவே சுயாதீனமான நீதியான விசாரணை ஒன்றை நடத்துவதன் மூலமே பொது மக்கள் மத்தியில் உள்ள ஐயத்தை நீக்கி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து தெளிவான முடிவுக்கு வரமுடியும்.
இந்த விசாரணையை நடத்த வேண்டிய பொறுப்பு என்னுடையது. எனினும் நான் இந்த விசார ணையை மேற்கொள்ள ஆரம்பித்தால் ஏனைய வேலைகளை நான் பார்க்க முடியாமல் போய்விடும். எனவேதான் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரை உள்ளடக்கி விசாரணைக் குழு ஒன்றை நியமித் துள்ளேன்.
மேலும் நிதி விடயம் தொடர்பில் சபையின் அனுமதி தேவை மற்றும் வெளிப்படை தன்மை என் பவற்றை கருதி வெளிப்படை தன் மையின் அடிப்படையிலேயே விசாரணை இடம்பெற வேண்டும் என முதலமைச்சர் தனது கருத்தை தெரிவித்தார்.