காணாமற்போனோர் பணியக சட்டத்துக்கு எதிராக இராணுவத்தினர் போராட்டம்
காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி, தேசிய போர் வீரர்கள் அமைப்பு, வீரலங்கா பவுண்டேசன் ஆகியவற்றின் தலைமையில் சிறிலங்கா படையினர் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தினர்.
பத்தரமுல்லையில் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் அமர்ந்து இவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போர் வீரர்களை வேட்டையாடுவதே அரசாங்கத்தின் எண்ணம் என்றும், மேற்குலக சக்திகளை திருப்திப்படுத்தவே நல்லிணக்கத்தை அரசாங்கம் தேடுவதாகவும், காணாமற்போனோர் பணியக சட்டம் சிறிலங்காவின் இறைமைக்குச் செய்யப்படும் துரோகம் என்றும் குறிப்பிட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
பெங்கமுவ நாலக்க தேரர் தலைமையிலான தேசப்பற்று பிக்குகள் முன்னணியைச் சேர்ந்த பிக்குகளும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, பவித்ரா வன்னியாராச்சி, காமின் லொக்குகே, பந்துல குணவர்த்தன, சிசிர ஜெயக்கொடி ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.