Breaking News

எட்கா உடன்பாடு குறித்துப் பேச இலங்கை வருகிறார் இந்திய வர்த்தக அமைச்சர்



எட்கா உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தியாவின் வர்த்தக அமைச்சர் வி்ரைவில் சிறிலங்கா வருவார் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எட்கா உடன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று கூட்டு எதிரணியின் உறுப்பினர் ஜெயந்த சமரவீர எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர், “இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள எட்கா உடன்பாட்டை வரையும் பேச்சுக்களை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்காக இதுபோன்ற உடன்பாடுகள், சீனா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுடனும் செய்து கொள்ளப்படும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில், இந்தியாவுடன் எட்கா உடன்பாட்டைச் செய்து கொள்வது தொடர்பான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பொறுப்பு அபிவிருத்தி மூலோபாய, அனைத்துலக வர்த்தக அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு அமைச்சின் கீழ் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி மூலோபாய, அனைத்துலக வர்த்தக அமைச்சரே சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாக இந்தியாவுடன் உடன்பாட்டில் கையெழுத்திடுவார். 20 மில்லியன் மக்கள் தொகையை மாத்திரம் கொண்ட நாம் வரையறுக்கப்பட்ட சந்தையையே கொண்டிருக்கிறோம். இது போதாது.

உலகெங்கும் நாம் புதிய சந்தைகளைத் தேட வேண்டும். வெளிநாட்டுச் சந்தைகள் இல்லாமல் எவ்வாறு நாம் எமது உற்பத்திகளை விற்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.