இலங்கை அரசுக்கு சார்பாக ஐ.நா செயற்படுகிறது! முதலமைச்சர் குற்றச்சாட்டு!
ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு சார்பான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக சாடியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் உனா மக்குலேயினால் சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் கருத்துக்களை பெறும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை தொடர்பில் எந்த தகவல்களும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் உனா மக்குலேயினால் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் கருத்துக்களை பெறும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களை பெறும் நோக்கில் முதலமைச்சறினால் குறித்த விடைத்தை சபையின் கவனத்திற்கு விட்டார். இதன் போதி ஐக்கிய அமெரிக்கா சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு ஆயிரத்து ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலரை நாங்கள் வேண்டாம் என்றுவிட்டு இப்போது சமாதானத்தை கட்டியெழுப்ப எம்மிடம் கருத்து கேட்பது எதற்காக என உறுப்பினர் சயந்தன் கூறினார்.
எனினும் இதன் போது, காசு கொடுத்து ஒருபோதும் நல்லிணக்கத்தை உருவாக்கி விட முடியாது என சுட்டிக்காட்டியுள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி கே.சர்வேஸ்வரன், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச விசாரணை ஊடக உண்மையை கண்டறிவதன் மூலமே நல்லிணக்கத்தை அடைய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம், பொறுப்புக்கூறல் என்பவற்றுக்காக அரசியல் தீர்வுக்காக நாம் இன்னும் பல வருடம் காத்திருக்க போகின்றோமா? அல்லது உண்மையை கண்டறிதல், நிலைமாறுகால நீதி, சமாதானத்தை கட்டியெழுப்புதல் இவை எல்லாவற்றையும் ஒரே நிலையில் கொண்டு செல்ல போகின்றோமா என உறுப்பினர் சயந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த உறுப்பினர் சிவாஜிலிங்கம், இந்த பணத்தையும் நல்லிணக்கத்தையும் ஒருபோதும் ஒப்பிட்டு கதைக்க முடியாது எனவும், நல்லிணக்கம் உருவாக வேண்டுமென்றால் முதலில் மக்கள் விரும்பும் படி விடயங்கள் நடைபெற வேண்டும். மக்களை சூழவுள்ள இராணுவம் வெளியேற வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும் செய்யாமல் விட்டு காசு ஒதுக்கினால் மட்டும் நல்லிணக்கம் உருவாக்கி விட முடியாது. என கூறினார்.
இதன் பின்னர் எழுந்த உறுப்பினர் அஸ்மின் ஐக்கிய நாடுகள் சபை அரசிற்கு ஆதவாக இருந்தாலும் கூட அதனை நாம் வெளிப்படையாக பொது இடத்தில் கூறுவது இராஜதந்திர ரீதியில் நமக்கு பல பின்னடைவுகளை ஏற்படுத்திவிடும் என கூறினார். இதன் போது பதிலளித்த வடக்கு மாகாண முதலமைச்சர் குறித்த பணம் திரும்ப செல்லவில்லை எனவும், தற்போது கூறபட்டுள்ள சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்ற விடயத்திற்கு குறித்த பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்.